கேரள போலீசாரின் புதிய திட்டங்கள் மூலம் புகார்களுக்கு விரைவான தீர்வு – உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தகவல்!
திருவனந்தபுரம், 03 நவம்பர் (ஹி.ச.) கேரள போலீசார் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள HM Acts மற்றும் HOMeS திட்டங்கள் மூலம் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
Kerala mn minister


திருவனந்தபுரம், 03 நவம்பர் (ஹி.ச.)

கேரள போலீசார் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள HM Acts மற்றும் HOMeS திட்டங்கள் மூலம் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

HM Acts மற்றும் HOMeS ஆகிய இரண்டும் கேரள போலீசாரால் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத் திட்டங்களாகும். உள்துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை மேலும் திறம்பட மேற்கொள்வதுடன், போலீஸ் துறையுடன் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தால், அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்படும் முடிவுகள் குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும்.

இதன் மூலம் மக்கள் தங்களது புகார்கள் தொடர்பான பதில்களை எளிதாகப் பெற முடியும்.HOMeS திட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் பிரத்யேக டேஷ்போர்டு அமைக்கப்படும்.

இதன் மூலம் பல்வேறு முக்கியத் தகவல்களை ஒரே இடத்தில் கண்காணிக்க முடியும். குறிப்பாக, எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர், எத்தனை மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இதில் இடம்பெறும்.

இந்தத் திட்டங்கள் மூலம் போலீசாரின் விசாரணை அல்லது புலனாய்வுப் பணிகளில் உள்துறை அமைச்சகம் தலையிடாது.

மாறாக, துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், போலீஸ் துறையுடன் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கும் தேவையான தகவல்களைப் பெறுவதே நோக்கம் என விளக்கமளித்தார்.

மேலும், சிறார் குற்றங்கள் கேரளாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுப்பதற்கும், சிறார்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V