சூரிய, காற்றாலை மின் திட்டங்களுக்கு இனி ஆன்லைனில் அனுமதி- புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்திய அமைச்சர் நிர்மல் குமார்!
சென்னை, 03 நவம்பர் (ஹி.ச.) தமிழக முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இன்று சென்னை மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இந்த இரண்டு முக்கிய முன்னெடுப்புகளையும் தொடங்கி வைத்த
Nirmalkumar


சென்னை, 03 நவம்பர் (ஹி.ச.)

தமிழக முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இன்று சென்னை மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இந்த இரண்டு முக்கிய முன்னெடுப்புகளையும் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், அதிக மின்தேவை ஏற்படும் நேரங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

பகல் நேரங்களில் சூரிய மின்சாரத்தின் மூலம் கிடைக்கும் உபரி மின்சாரத்தை மின்கலங்களில் சேமித்து வைத்து, மாலை மற்றும் இரவு நேரங்களில் மின்தேவை அதிகரிக்கும்போது பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் மின்கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு, 2029ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கொள்கையில் தனித்த மின்கல சேமிப்புத் திட்டங்கள், சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியுடன் இணைந்த சேமிப்புத் திட்டங்கள், மின்பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்புகளுக்கு உதவும் திட்டங்கள் ஆகியவற்றுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களிலும் கூடுதல் அனுமதியின்றி மின்கல சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட புதிய சூரிய மின் திட்டங்களில், நிறுவப்பட்ட சூரிய மின்திறனில் குறைந்தபட்சம் 10 சதவீத அளவிற்கு மின்கல சேமிப்பு வசதி அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சேமிப்பு அமைப்புகள் நான்கு மணி நேரம் மின்சாரத்தை வெளியிடும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.

மின்கல ஆற்றல் சேமிப்புத் திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், தகுதியுடைய திட்டங்கள் வணிகரீதியாகச் செயல்படத் தொடங்கும் நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மின்கடத்தல் மற்றும் மின்பரிமாற்றக் கட்டணங்களில் 100 சதவீத விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் தேவையான மின்கட்டமைப்பு இணைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆதரவுகளும் வழங்கப்பட உள்ளன.

முன்பு சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை மின் திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்கள், மின்கட்டமைப்பு இணைப்பு அனுமதி பெறுவதற்காக மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் நேரில் காகித வடிவில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

மேலும், விண்ணப்பத்தின் நிலையை அறியவும் தொடர்ந்து அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வேண்டிய நிலை இருந்தது.

இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்பங்களுக்கான ஒற்றைச்சாளர இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சூரிய மின்சாரம், காற்றாலை, சூரிய மற்றும் காற்றாலை ஒருங்கிணைந்த திட்டங்கள், மின்கல ஆற்றல் சேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை ஒரே இணையதளத்தில் சமர்ப்பிக்க முடியும்.

திட்டமுனைவோர் முதலில் இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

அதற்கான கட்டணத்தையும் இணையவழியில் செலுத்த முடியும். தொடர்ந்து தொழில்நுட்ப ஆய்வு, மின்சுமை ஓட்டப் பகுப்பாய்வு மற்றும் மின்கட்டமைப்பு இணைப்பு அனுமதி பெறுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் ஒரே தளத்தில் மேற்கொள்ளலாம்.

விண்ணப்பத்தின் ஒவ்வொரு கட்ட முன்னேற்றமும் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும். ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை இணையவழியிலேயே சரிசெய்யவும், அனுமதி ஆணைகளை மின்னணு முறையில் பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களின் நிலையை அறிய முகப்புப் பலகை மற்றும் தகவல் அறிக்கைகள் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த இரு திட்டங்களும் தமிழகத்தின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதிய முதலீடுகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் அனில் மேஷ்ராம், மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் ம. கோவிந்தராவ், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் பி.என். ஸ்ரீதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

Hindusthan Samachar / LOGESHWARI V