தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற திருத்தேரோட்டம்!
தென்காசி, 03 நவம்பர் (ஹி.ச.) வடக்கே காசி, தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிறப்புப் பெற்ற தென்காசியில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காசி விஸ்வநாதர் – உலகம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடை
Thenkasi


தென்காசி, 03 நவம்பர் (ஹி.ச.)

வடக்கே காசி, தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிறப்புப் பெற்ற தென்காசியில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காசி விஸ்வநாதர் – உலகம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் திருக்கல்யாணத் திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 26ஆம் தேதி காலை உலகம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, விழாவின் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

மேலும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி நான்கு மாட வீதிகள் வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனைப் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக உலகம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்பட்டு, சங்கொலி முழங்க, சிவனடியார்கள் சங்குகளை ஊதியபடி தேருக்கு முன்னால் சென்றனர்.

தொடர்ந்து, பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் தென்காசி நகரின் நான்கு மாட வீதிகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி விழாக்கோலம் பூண்டன.

திருத்தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு நான்கு மாட வீதிகளிலும் அருள்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனால் விழா நடைபெற்ற பகுதிகளில் ஆன்மிக உற்சாகம் நிறைந்திருந்தது.

ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான உலகம்மன் திருக்கல்யாண வைபவம் வரும் 5ஆம் தேதி இரவு உலகம்மன் சன்னதியில் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V