Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 நவம்பர் (ஹி.ச.)
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மூன்று நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
அதன்படி, கடந்த நவம்பர் 2ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அவரைக் காவலில் எடுத்த போலீசார், மூன்று நாட்களாக விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, காவல்துறை தரப்பில் அவரது மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, போலீஸ் காவலில் இருந்தபோது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அன்பில் மகேஸ், இல்லை எனப் பதிலளித்தார். உணவு முறையாக வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு, வழங்கப்பட்டதாகப் பதிலளித்தார்.
ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட வேண்டிய நிலையில், அதுவரை அவரைச் சிறையில் அடைக்க நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி மீண்டும் உத்தரவிட்டார்.
மேலும், தனது வழக்கறிஞர்களுடன் 10 நிமிடங்கள் பேசுவதற்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தின் வராண்டாவில் தனது வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை
நடத்தினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P