இலங்கையில் தேங்கிய 150-க்கும் மேற்பட்ட மிளகாய் சரக்கு கண்டெய்னர்கள் - பியூஷ் கோயலுக்கு சந்திரபாபு கடிதம்
அமராவதி, 04 நவம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய 150-க்கும் மேற்பட்ட மிளகாய் சரக்கு கண்டெய்னர்கள் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான மிளகாய் சரக்குகள் முட
A


அமராவதி, 04 நவம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய 150-க்கும் மேற்பட்ட மிளகாய் சரக்கு கண்டெய்னர்கள் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன.

சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான மிளகாய் சரக்குகள் முடங்கியுள்ளதால், விவசாயிகளும், ஏற்றுமதியாளர்களும் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனா, வங்காளதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட இந்த மிளகாய் சரக்குகளில் ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக கூறி, சம்பந்தப்பட்ட நாடுகள் அவற்றை ஏற்க மறுத்து வருகின்றன. இதனால் 150-க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கொழும்பு துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரச்சினையால் மிளகாய் விவசாயிகளும், ஏற்றுமதியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி, மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள மிளகாய் சரக்குகளை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுக்க இந்த விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA