செஞ்சி சிறுமி வழக்கில் அவரது தாயாரிடம் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை
விழுப்புரம், 04 நவம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹேமலதா, வீட்டில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த போது கடந்த 12-ஆம் தேதி அதிகாலை திடீரென காணாமல் போனார். சிறுமி காணாமல் போய் இன்றோடு 24
Gingee Child


விழுப்புரம், 04 நவம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹேமலதா, வீட்டில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த போது கடந்த 12-ஆம் தேதி அதிகாலை திடீரென காணாமல் போனார்.

சிறுமி காணாமல் போய் இன்றோடு 24 நாட்களான நிலையிலும் இதுவரை சிறுமி குறித்து எவ்வித தடயமும், தகவலும் கிடைக்கவில்லை.

ஏற்கனவே இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட காவல்துறை 10 நாட்கள் விசாரணை செய்த நிலையில் வழக்கில் முன்னேற்றம் ஏற்படாததால் கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி முதல் இன்று வரை 14 நாட்களாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம பொதுமக்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையிலும் இன்று வரை சிறுமி குறித்து எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.

இதனிடையே சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரையின் கூட்டாளியான ஆடு மேய்க்கும் இளைஞர் அரவிந்திடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தவிர சிறுமியின் வீட்டருகே உள்ள செங்கல் சூளை, விவசாய நிலம், மலைப்பகுதி மற்றும் ஆலம்பூண்டி வனப்பகுதி உள்ளிட்ட இடங்களிலும் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி விசாரணை தொடங்கி இன்றோடு 14 நாட்களான நிலையில் காணாமல் போன சிறுமி குறித்து எந்தவித தடயமும் கிடைக்காமல் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து திணறி வருகின்றனர்.

இதனால் காணாமல் போன சிறுமியின் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன், சிறுமியின் தாய் பவானியிடம் விசாரணை நடத்தி வருகின்றார். ஏற்கனவே சிறுமியின் தாய் பவானியிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN