மீனாட்சி அம்மன் கோவில் சோதனைச் சாவடியில் சீருடையில் புகைபிடித்த காவலர் விவகாரம் - மதுரை காவல் ஆணையர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 04 நவம்பர் (ஹி.ச.) கடந்த 16.10.2026 அன்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், உதவி ஆய்வாளர் ஒருவர் சீருடையில் பணியில் இருந்தபோது சிகரெட் புகைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு திருத்தொண்டர
உயர்நீதிமன்றம்


மதுரை, 04 நவம்பர் (ஹி.ச.)

கடந்த 16.10.2026 அன்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், உதவி ஆய்வாளர் ஒருவர் சீருடையில் பணியில் இருந்தபோது சிகரெட் புகைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தும், அவர் தொடர்ந்து புகைபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முறையாகப் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, தமிழகம் முழுவதும் காவல்துறையினரின் ஒழுக்கத்தை உறுதி செய்யவும், சட்ட விதிகள் மற்றும் பணியாளர் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்தவும் உத்தரவிடக் கோரி ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சம்பந்தப்பட்ட காவலருக்கு குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் காவலர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என ஏதேனும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், சம்பந்தப்பட்ட காவலருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, அது வசூலிக்கப்பட்டுள்ளதா, துறை ரீதியாக வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள்

உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P