பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் - 850 விரைவு நீதிமன்றங்களை வலுப்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!
புதுடெல்லி, 04 நவம்பர் (ஹி.ச.) பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கும் நோக்கில், நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 850 விரைவு நீதிமன்றங்களை வலுப்படு
Aswini vaishnav


புதுடெல்லி, 04 நவம்பர் (ஹி.ச.)

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கும் நோக்கில், நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 850 விரைவு நீதிமன்றங்களை வலுப்படுத்தி, அவற்றின் செயல்பாட்டை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குற்றங்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்குத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், தேவையான இடங்களில் புதிய சட்டங்களையும் இயற்ற அரசு தயாராக உள்ளது.

மேலும், சட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 850 விரைவு நீதிமன்றங்களை வலுப்படுத்தவும், அவற்றின் செயல்பாட்டுக் காலத்தை நீட்டிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.

மேலும், நாட்டின் மின்சாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் மொத்தம் 92 ஜிகாவாட் மணி (GWh) திறன் கொண்ட எரிசக்தி சேமிப்புத் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் 30 ஜிகாவாட் மணி திறன் பேட்டரி சேமிப்பிற்கும், 60 ஜிகாவாட் மணி திறன் நீரேற்று மின் சேமிப்பு முறைக்கும் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசுகளுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்தச் சேமிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதுதவிர, முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களைச் செயலாக்குவதற்கான புதிய திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சுரங்கங்கள் மூலம் கிடைக்கும் கனிமங்கள் மற்றும் மறுசுழற்சி மூலம் பெறப்படும் கனிமங்களை உற்பத்திக்குப் பயன்படுத்தும் வகையில் தயார்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அடையாளம் காணப்பட்டுள்ள 24 முக்கிய கனிமங்களும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். இதன் மூலம் மின்னணுவியல், செமிகண்டக்டர், பேட்டரி உற்பத்தி, பாதுகாப்புத் துறை, கனரக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்துறைகளுக்கு ஊக்கம் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V