Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் இ நாம் 2.0 திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கடந்த 19 நாட்களாக கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முடங்கியுள்ள விற்பனைக் கூடங்களை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வேளாண் விற்பனைத் துறையின் கட்டுப்பாட்டில் 27 மாவட்ட விற்பனைக் குழுக்கள் செயல்படுகின்றன. இவற்றின் கீழ் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும், 13 துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் இயங்கி வருகின்றன.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்து, அவர்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதே இவற்றின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நடைமுறையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தேசிய வேளாண் சந்தைத் திட்டமான இ நாம் (e-NAM) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இ நாம் 2.0 திட்டம் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி, வணிகர்கள் நேரடியாக மட்டுமின்றி இணையவழியாகவும் விளைபொருட்களைப் பார்வையிட்டு ஏலத்தில் கொள்முதல் செய்யலாம். மேலும், கொள்முதல் செய்த பொருட்களுக்கான தொகையை அன்றைய தினமே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
தற்போதைய நடைமுறையில் விளைபொருட்களின் மதிப்பைப் பொறுத்து விவசாயிகளுக்கான பணம் கிடைக்க ஒன்று முதல் 10 நாட்கள் வரை ஆகிறது.
குறிப்பாக, அதிக மதிப்புள்ள பொருட்களுக்கான தொகையைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்தத் தாமதம் தவிர்க்கப்படுவதுடன், இணையவழி ஏலத்தின் மூலம் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
இருப்பினும், புதிய முறையில் உடனடியாகப் பணம் செலுத்துவது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மேலும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு மின்னணு சாதனங்களைக் கையாள்வதில் பயிற்சி தேவை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி முதல் கொள்முதலைப் புறக்கணித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு வணிகர்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே உழவர்களின் கோரிக்கையாக உள்ளது.
தேவையான பயிற்சிகளை வழங்கி இ நாம் 2.0 திட்டத்தைச் செயல்படுத்துவதுடன், முடங்கியுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V