Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 04 நவம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனால் மழைக்கான அறிகுறிகள் பெரிதாக இல்லாத நிலையில், நேற்று மாலை நேரத்தில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி நகரப் பகுதிகளில் இடி, மின்னல் இன்றி கனமழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கள்ளக்குறிச்சி நகரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி, வ.உ.சி. நகர், கேசவலு நகர், விளாந்தாங்கல் சாலை மற்றும் கச்சிராயப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதுதவிர, புறநகர்ப் பகுதிகளான ஆலத்தூர், காரனூர், மாடூர், தச்சூர், அரியபெருமானூர், குதிரைச்சந்தல் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக நகரின் முக்கியச் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதனால் அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், கார் ஓட்டுநர்கள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர்.
குறிப்பாக, சாலைகளில் தேங்கிய மழைநீரைக் கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
திடீரென பெய்த இந்த மழையால் மாலை நேரத்தில் கள்ளக்குறிச்சி நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / LOGESHWARI V