Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 04 நவம்பர் (ஹி.ச.)
கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை மேற்கொண்டு வரும் ‘ஆபரேஷன் தூஃபான்’ திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து மாதங்களில் 60-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஐ.ஜி. புத்தா விமலாதித்யா தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ‘ஆபரேஷன் தூஃபான் 2.0’ திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை கடந்த ஐந்து மாதங்களில் பல்வேறு கட்டங்களை எட்டியுள்ளது.
இதுவரை 60-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளன.
மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 5 பேர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் தற்போது மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளதாகவும், இதுவரை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புக் குழுக்களின் ஒத்துழைப்புடன் 5,000-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், கல்வி நிறுவனங்களைப் பாதுகாப்பான சூழலாக மாற்றுவதும் இதன் நோக்கமாகும்.
இதன் அடுத்தகட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஆபரேஷன் தூஃபான் 2.0’ திட்டத்தில் அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளும் இணைந்து செயல்பட உள்ளன.
உள்ளூர் அளவில் போதைப்பொருள் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய இடங்கள், நபர்கள் மற்றும் குடும்பங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக கேரளாவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் ஐ.ஜி. புத்தா விமலாதித்யா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V