12 நாட்களாக ரத்து செய்யப்பட்ட நீலகிரி மலை ரயில் சேவை - பாறைகளை வெடிவைத்து அகற்றும் பணி தீவிரம்!
மேட்டுப்பாளையம், 04 நவம்பர் (ஹி.ச.) கடந்த மாதம் மேட்டுப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீலகிரி மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன. குறிப்பாக, கல்லார் மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்
Ooty


மேட்டுப்பாளையம், 04 நவம்பர் (ஹி.ச.)

கடந்த மாதம் மேட்டுப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீலகிரி மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன.

குறிப்பாக, கல்லார் மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் மீது மண் மற்றும் பெரிய பாறைகள் சரிந்து விழுந்தன.

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, கடந்த 24ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்களாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

மண் சரிவால் பாதிக்கப்பட்ட தண்டவாளப் பகுதிகளைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாறைகள் உருண்டு விழுந்ததில் சேதமடைந்த தண்டவாளப் பகுதிகளில் இருப்புப் பாதைகளை மாற்றியமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும், சீரமைப்புப் பணிகள் நடைபெறும் மலைப்பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாகப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணிகள் திட்டமிட்ட வேகத்தில் முடிவடையாமல் தாமதமாகி வருகின்றன.

இதற்கிடையே, தண்டவாளத்தின் மீது சரிந்து விழுந்துள்ள பெரிய பாறைகளை அகற்றுவதற்காக வெடிவைத்து தகர்க்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ரயில் பாதையில் உள்ள தடைகளை அகற்றி, சேதமடைந்த இருப்புப் பாதைகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீரமைப்புப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து, ரயில் பாதை பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பின்னரே நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V