பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.1.25 லட்சம் லஞ்சம் -நீலகிரியில் பெண் வி.ஏ.ஓ கைது!
நீலகிரி, 04 நவம்பர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட எடக்காடு நடுஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். தனது தந்தையின் பெயரில் இருந்த 3½ சென்ட் நிலத்தை தான செட்டில்மெண்ட் மூலம் பெற்றுள்ளார். இதையடுத்து, அந்த நிலத்தி
Police


நீலகிரி, 04 நவம்பர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட எடக்காடு நடுஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். தனது தந்தையின் பெயரில் இருந்த 3½ சென்ட் நிலத்தை தான செட்டில்மெண்ட் மூலம் பெற்றுள்ளார்.

இதையடுத்து, அந்த நிலத்திற்கான பட்டாவில் தனது பெயரை மாற்றுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டுள்ளார்.

அப்போது பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.1.50 லட்சம் லஞ்சமாக வழங்க வேண்டும் என உமா பிரியா கேட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்வளவு பெரிய தொகையைத் தர முடியாது என வசந்த் தெரிவித்த நிலையில், இறுதியாக ரூ.1.25 லட்சம் கொடுத்தால் பணியை முடித்துத் தருவதாக அவர் கூறியதாகப் புகார் எழுந்துள்ளது.

அரசு அலுவலகப் பணிக்காக லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்த், இதுகுறித்து நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜாய் தயாள் உத்தரவின்பேரில், ஆய்வாளர் சண்முகவடிவு மற்றும் உதவி ஆய்வாளர் சக்தி தலைமையிலான போலீசார் நடவடிக்கையில் இறங்கினர்.

வசந்திடம் ரசாயனப் பொடி தடவிய பணத்தை வழங்கி, லஞ்சம் கேட்கப்பட்ட தொகையைப் பெற்றுக்கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதற்கிடையே, நியூ அட்டுபாயில் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா பணி நிமித்தமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பணத்தை மஞ்சூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு வசந்திடம் அவர் தெரிவித்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, வசந்த் குறிப்பிட்ட பணத்தை வங்கி ஊழியரிடம் வழங்கியபோது, அங்கு கண்காணிப்பில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவைக் கைது செய்துள்ளனர்.

மேலும், பணத்தைப் பெற்றுக்கொண்ட தனியார் வங்கி ஊழியரின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பட்டா பெயர் மாற்றத்திற்காக லஞ்சம் கேட்டதாக எழுந்த இந்தப் புகார் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V