புதுச்சேரியில் ப.கண்ணனுக்கு சிலை அமைக்க வேண்டும் -முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை!
புதுச்சேரி, 04 நவம்பர் (ஹி.ச.) புதுச்சேரி அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் செயல்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மறைந்த ப.கண்ணன். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சு
Puducherry


புதுச்சேரி, 04 நவம்பர் (ஹி.ச.)

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் செயல்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மறைந்த ப.கண்ணன். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

சுமார் 55 ஆண்டுகள் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்களுக்காகப் பணியாற்றியவர் என அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள சூழலில், அவரது அரசியல் மற்றும் பொதுப்பணியை நினைவுகூரும் வகையில் பிறந்தநாள், நினைவு நாள் ஆகியவற்றை அரசு சார்பில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ப.கண்ணனின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை அரசு நிகழ்வுகளாக அனுசரிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால், இதுதொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ப.கண்ணனின் மகனும் ராஜ்பவன் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான விக்னேஷ் கண்ணன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

சிலை அமைக்கவும், சாலைக்குப் பெயர் சூட்டவும் கோரிக்கை

மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ.,

புதுச்சேரி அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சுமார் 55 ஆண்டுகள் பணியாற்றிய தனது தந்தை ப.கண்ணனின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், புதுச்சேரியில் அவருக்கு அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என்றும், நகரப் பகுதியில் உள்ள முக்கியச் சாலை ஒன்றுக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V