Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீவில்லிபுத்தூர், 04 நவம்பர் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது கண்டறியப்படும் குறைகளைச் சரிசெய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கிற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
குறிப்பாக, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் உரிய அளவில் வழங்கப்படுவதில்லை என்றும், சில குறிப்பிட்ட பொருட்களை வாங்குமாறு கடை ஊழியர்கள் வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி தெரு மற்றும் தேரடி பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எடை குறைவின்றி சரியான அளவில் வழங்கப்பட வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேர்வு செய்து வாங்குவதற்கு உரிமை உள்ள நிலையில், குறிப்பிட்ட பொருட்களை வாங்குமாறு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கடை ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் எண்ணெய் பாக்கெட்டுகளையும் அவர் பார்வையிட்டார்.
அவற்றில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள் முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் இதுபோன்ற புகார்கள் மீண்டும் எழுந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
ஆய்வின்போது கடைகளின் முன்பு கூடியிருந்த பொதுமக்களிடமும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் குறைகளைக் கேட்டறிந்தார்.
நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் ஏதேனும் சிரமங்கள் அல்லது முறைகேடுகள் இருந்தால் உடனடியாகத் தன்னிடம் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான ரேஷன் பொருட்கள் முறையாகவும், உரிய எடையிலும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Hindusthan Samachar / LOGESHWARI V