Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 04 நவம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இதுவரை ஒன்பது அதிகாரிகள் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில், ஏற்கெனவே எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த அசோக்குமார், நிர்வாக காரணங்களுக்காக மதுரை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த ஸ்டாலின் ஐ.பி.எஸ்., தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, அவர் இன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்படி தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, புதிய எஸ்.பி.க்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
புதிய காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் ஐ.பி.எஸ். பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு பிரிவு அதிகாரிகள் அவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வருகின்றனர்.
ஏழு ஆண்டுகளைக் கடந்த தென்காசி மாவட்டத்தில் இதுவரை 10 காவல் கண்காணிப்பாளர்கள் பணியாற்றியுள்ள நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் ஐ.பி.எஸ். தலைமையில் மாவட்ட காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
புதிய எஸ்.பி. பொறுப்பேற்றுள்ளதால் மாவட்டத்தின் காவல்துறை நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V