Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 04 நவம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டத்தில் தேனி, சின்னமனூர், போடிநாயக்கனூர், கம்பம் உள்ளிட்ட நகராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் நகராட்சிப் பகுதிகளில் சாலைகள், தெருக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என ஒப்பந்தப் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் தனியார் நிறுவனம் காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள், நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகைக்கான போனஸ் வழங்க வேண்டும், தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான தளவாடப் பொருட்களையும் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளம் மற்றும் பண்டிகைக்கால போனஸ் கிடைக்காததால் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பணிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படாததால் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சம்பளம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்குமா என தூய்மைப் பணியாளர்கள் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V