நீட் தேர்வுக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு- 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வலியுறுத்தல்!
சென்னை, 04 நவம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், நந்தன் நிலேகனி தலைமையிலான ஒன்றிய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டப் பணிக்குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, உ
Tn govt


சென்னை, 04 நவம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், நந்தன் நிலேகனி தலைமையிலான ஒன்றிய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டப் பணிக்குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின்போது, உயர்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் (NEET) தேர்வு மற்றும் அதனைப் போன்ற நுழைவுத் தேர்வுகள் தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக, மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் போன்ற பொதுநுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்குப் பதிலாக, மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே உயர்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் உயர்மட்டக் குழுவினரிடம் எடுத்துரைக்கப்பட்டன.

கடந்த 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியது.

தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு எதிராக நீண்டகாலமாக பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒன்றிய அரசின் தேர்வு சீர்திருத்தக் குழுவிடமும் தனது நிலைப்பாட்டை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி, பிற உயர்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும் நீட் மற்றும் அதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பிளஸ் 2 மதிப்பெண்களையே மாணவர் சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதியாகக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V