ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறது – பாஜக மாநிலத் தலைவர் பங்கஜ் சவுத்ரி குற்றச்சாட்டு!
உத்திரப் பிரதேச, 04 நவம்பர் (ஹி.ச.) உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச பாஜக தலைவர் பங்கஜ் சவுத்ரி, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நாட்டின் மக்களைத் தவறாக வழிநடத்தவும், ஜனநாயகத்தைப் பலவீனப்
Bjp


உத்திரப் பிரதேச, 04 நவம்பர் (ஹி.ச.)

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச பாஜக தலைவர் பங்கஜ் சவுத்ரி, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நாட்டின் மக்களைத் தவறாக வழிநடத்தவும், ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தவும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஆட்சி மாற்றம் குறித்து சிலர் பேசுகின்றனர். வங்கதேசத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற பேச்சுகள் அவர்களின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

ஜனநாயக நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது தேர்தல் மூலம் மக்களின் வாக்குகளால் மட்டுமே நடைபெற வேண்டும். அராஜகமான சூழலை உருவாக்கி ஆட்சியை மாற்ற முடியாது.

இந்தியாவின் ஜனநாயகக் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

நாட்டில் ஜனநாயக முறைப்படியே ஆட்சி நடைபெற வேண்டும்; அராஜகத்திற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, நாடு முழுவதும் பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முதலமைச்சர் மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் எஸ்.டி. ஹசன், ராமர் பிறப்பிடம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாகப் பேசிய பங்கஜ் சவுத்ரி, எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது புதிதல்ல என்றார்.

மேலும், ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் தொடர்புடையவர்களின் கருத்துகள் மூலம் அவர்களின் உண்மையான சிந்தனையும் நோக்கமும் வெளிப்படுகின்றன.

சிலர் ராமர் பிறந்த இடத்திற்கு ஆதாரச் சான்றிதழ் கேட்கின்றனர். இன்னும் சிலர் சனாதன தர்மத்தின் புனித மந்திரங்களை அவதூறான வார்த்தைகள் என்று விமர்சிக்கின்றனர்.

இதுபோன்ற கருத்துகளுக்கு மக்கள் தேர்தலில் தங்களது வாக்குகள் மூலம் பதிலடி கொடுக்கும்போது, ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் வாக்குகள் திருடப்பட்டதாகக் குற்றம்சாட்டுவார்கள் என விமர்சித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V