முதலமைச்சர் விஜய் எம்ஜிஆர் போல திகழ்கிறார் – சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் பேச்சு!
Tamil Nadu, 04 நவம்பர் (H.S.) சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 643 குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் இர
JCD Prabhakar


Tamil Nadu, 04 நவம்பர் (H.S.)

சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 643 குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கருமங்குளம் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 24 அடுக்குமாடிக் குடியிருப்புகளும் திறந்து வைக்கப்பட்டன.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேற்கொண்ட இந்தப் பணிகளின் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சட்டப்பேரவைத் தலைவர் ஜெ.சி.டி. பிரபாகர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜெ.சி.டி. பிரபாகர், முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு நல்ல மாற்றம் ஏற்படும் என மக்கள் எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டார்.

தற்போது அவர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தனது பாடலில் அனைவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்ற கனவை வெளிப்படுத்தியதாகவும், அந்தக் கனவை நனவாக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பதே அரசின் நோக்கம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் இன்றி அமைதியான முறையில் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் மக்களுக்காகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தலைமைச் செயலகத்திற்கு உரிய நேரத்தில் வந்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசுப் பணிகளை ஆய்வு செய்து வருவதாகவும் பாராட்டினார்.

மேலும், முதலமைச்சருக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் தனது உரையில் ஜெ.சி.டி. பிரபாகர் கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / LOGESHWARI V