சோவியத் ரஷ்யா தான் இந்தியாவுக்கு உதவ முன்வந்தது - இஸ்ரோ தலைவர் நாராயணன்
சென்னை, 05 நவம்பர் (ஹி.ச.) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்ற வாளகத்தில், விண்வெளிக்கு சென்ற முதல் மனிதரான சோவியத் ரஷ்யாவை சேர்ந்த யூரி ககாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட
Isro


சென்னை, 05 நவம்பர் (ஹி.ச.)

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்ற வாளகத்தில், விண்வெளிக்கு சென்ற முதல் மனிதரான சோவியத் ரஷ்யாவை சேர்ந்த யூரி ககாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை இஸ்ரோ தலைவர் நாராயணன், ரஷ்ய துணைத் தூதர் வலேரி கோட்ஜாயேவ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

யூரி ககாரின் சிலை திறப்பு விழாவிற்கு பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள், இஸ்ராே தலைவர் நாராயணனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில், மாணவர்கள் மத்தியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசுகையில், யூரி ககாரின், உலக விண்வெளி வீரர்கள் அனைவருக்கும் முன்னோடி. அவரது சிலையைத் திறந்து வைத்தது பெருமை அளிக்கிறது. இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் சோவியத் ரஷ்யா முக்கிய பங்காற்றியது.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டா, சோவியத் ரஷ்யாவின் ஏவுவாகனம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் விண்வெளி வளர்ச்சிக்கு சோவியத் ரஷ்யா செய்த உதவியை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில், முக்கியமான கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை வழங்க உலக நாடுகள் மறுத்து விட்டன. ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை (MTCR) காரணம் காட்டி, அந்தத் தொழில்நுட்பத்தை உலக நாடுகள், இந்தியாவுக்கு வழங்கவில்லை.

ஆனால், ரஷ்யா மட்டும் இந்தியாவுக்கு கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை வழங்க முன்வந்தது. அந்தத் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்காக ரஷ்யா சென்ற குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். எனினும், சில புவிசார் அரசியல் சூழ்நிலைகளால் அந்த முயற்சி நிறைவேறவில்லை.

இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவை விண்வெளிக்கு அனுப்பியதிலும் சோவியத் ரஷ்யாவின் பங்களிப்பு இருந்தது. பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவுக்கு சோவியத் ரஷ்யா உதவி செய்துள்ளது. தற்போது இந்தியா சொந்தமாக கிரையோஜெனிக் இயந்திரத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

1962-ஆம் ஆண்டு, விக்ரம் சாராபாய், இந்தியா விண்வெளித் திட்டத்தைத் தொடங்கிய போது இருந்த நிலைக்கும், தற்போதைய நிலைக்கும் இடையே மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலவின் தென்துருவப் பகுதியில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாகத் தரையிறக்கியது, முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்தது, நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது, பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட் மூலம் ஒரே பயணத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது என இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'விக்ரம்' நுண்செயலி (Vikram Processor), பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

ஒருகாலத்தில் விண்வெளித் தொழில்நுட்பத்துக்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருந்த இந்தியா, தற்போது மற்ற நாடுகளுக்கு உதவும் நிலையை எட்டியுள்ளது பெருமை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், ரஷ்யாவின் முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் சிலை, தமிழ்நாட்டில் பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் முதல் முதலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நான் முதன் முதலில் 1993-ஆம் ஆண்டு மாஸ்கோவில் முதல் முறையாக அவருடைய சிலையை பார்த்தேன். அது எனக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது. யூரி ககாரின் சிலையை பார்க்கும் போது, மாணவர்கள் ஊக்கமடைவார்கள். 1961 ஏப்ரல் 12-ஆம் தேதி, உலக மக்களுக்கு முக்கியமான நாள். சோவியத் ரஷ்யாவில் இருந்து யூரி ககாரின் முதல் விண்வெளி வீரராக விண்வெளிக்கு சென்று திரும்பிய நாள்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தற்பொழுது அதிகளவில் நடைபெற்று வருகிறது. 1969-ஆம் ஆண்டு, நிலவில் அவர் இறங்கி உள்ளார். முதன் முதலில் விண்வெளிக்கு சென்று வந்தவர் யூரி ககாரின். இந்தியாவிலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் உள்ளது. இந்த திட்டத்திற்கு ரஷ்யா அதிக அளவில் உதவி செய்து வருகிறது.

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அங்கிருந்து ராக்கெட் ஏவப்படும்.

இஸ்ரோ அக்டோபர் 28-ஆம் தேதி, விண்ணில் ஏவிய 'ஜிஎஸ்எல்வி எப் 18' செயற்கைக்கோள் நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது. ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதில், ரஷ்ய துணை தூதர் வலேரி கோட்ஜாயேவ் கூறுகையில்,

ரஷ்யா - இந்தியா இடையே விண்வெளி தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியா, ரஷ்யா உறவு வலிமையானதாக உள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள ரஷ்யா உதவி செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN