ஒசூர் சிப்காட் அருகே புதிய தொழிற்சாலைக் கட்டிட விபத்து -கான்கிரீட் தளம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!
கிருஷ்ணகிரி, 05 நவம்பர் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலைக்கான புதிய கட்டிடப் பணியின் போது, கான்கிரீட் அமைக்கும் பணி திடீரென சரிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியி
Accident


கிருஷ்ணகிரி, 05 நவம்பர் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலைக்கான புதிய கட்டிடப் பணியின் போது, கான்கிரீட் அமைக்கும் பணி திடீரென சரிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை தற்போது பார்க்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட சிப்காட் காவல் நிலைய எல்லைப் பகுதியான வேடரப்பள்ளி அருகே பிரபல பாட்டா (Bata) காலணி தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த வளாகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

குறிப்பாக, ஆர்ச் வடிவிலான மேற்கூரை அமைப்பிற்கு கான்கிரீட் போடும் பணியில் சுமார் 17 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, முட்டுக் கொடுக்கப்பட்டிருந்த ஜாக் (Jack) திடீரென நழுவியதாகக் கூறப்படுகிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பாரிய கான்கிரீட் கட்டமைப்பு மொத்தமாகச் சரிந்து தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் கான்கிரீட் மற்றும் இரும்பு கம்பிகளின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் அங்கிருந்த சுமார் 10 தொழிலாளர்கள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக வெளியே வந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் மேலும் இரண்டு அல்லது மூன்று தொழிலாளர்கள் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுவதால், ராட்சத இயந்திரங்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / ANANDHAN