Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 05 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்காது என திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
வரும் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக மற்றும் அதிமுக ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.
பசும்பொன்னில் தேவர் குருபூஜையின்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், திமுக, அதிமுகவின் ஆதரவை தேர்தல் ஆதரவாக மட்டுமே பார்ப்பதாகவும், அதனை அரசியல் கூட்டணியாகக் கருதக்கூடாது என்றும் விளக்கமளித்திருந்தார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது,
முதலில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும்; அதன்பிறகு முடிவெடுக்கப்படும் எனப் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றியைத் தவறவிட்டதாகவும், எனவே அடுத்த 5 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும், 5 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறினார்.
திராவிட இயக்கத்துக்கு எதிராகக் கட்சியைத் தொடங்கி, தொடர்ந்து திமுகவை விமர்சித்து வந்த சீமானுக்கு அம்பாசமுத்திரம் தொகுதியில் ஆதரவு அளிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam