அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன - வானதி சீனிவாசன்
சென்னை, 05 நவம்பர் (ஹி.ச.) முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் மூலம் கடந்த கால திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை பணம் கொழிக்கும் துறையாகவே மாற்றியிருந்திருக்கிறது என்பது வெளிச்சத்த
Vanathi Srinivasan


சென்னை, 05 நவம்பர் (ஹி.ச.)

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் மூலம் கடந்த கால திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை பணம் கொழிக்கும் துறையாகவே மாற்றியிருந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவதற்காகவே தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதிகளில் அரசாணையைத் திருத்தி வெளியிட்டதாகக் கூறப்படும் செய்தியும், சுமார் 40 லட்சம் முதல் 1 கோடி வரை டார்கெட் வைத்து ரூ.400 கோடி வரை முறைகேட்டில் செயல்பட்டதாகவும் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் செய்திகள் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

மாநில பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் துறையான பள்ளிக் கல்வித் துறையில் மக்களின் வரிப்பணத்தினையும் தாண்டி, தனியார் பள்ளிகளிடம் வசூல் வேட்டை நடந்திருப்பதாகக் கூறப்படுவது கடந்த கால திமுக அரசின் ஊழல் லிஸ்ட்டில் யார் Top-க்கு வருவது என்று போட்டிபோட்டுக் கொண்டு செயல்பட்டது போல் தெரிகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனைபேர் பின்னால் உள்ளனர் என்பதை CCB தீவிர விசாரணை நடத்தி அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அப்புறம், தற்போதைய தவெக அரசின் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே..! நீங்கள் சொன்ன அந்த 5 கோடி புகார் என்னவாயிற்று? என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN