வேலூரில் அடுத்தடுத்து மோதிய நான்கு வாகனங்கள் - 14 வயது பள்ளி மாணவன் உயிரிழப்பு
வேலூர், 05 நவம்பர் (ஹி.ச.) வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் மாநகராட்சிக்குச் சொந்தமான அரசு வாகனம், டாடா ஏசி சரக்கு வாகனம், கார் மற்றும் லாரி ஆகிய நான்கு வாகனங்களும் அடுத்தடுத்த
Vellore


வேலூர், 05 நவம்பர் (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் மாநகராட்சிக்குச் சொந்தமான அரசு வாகனம், டாடா ஏசி சரக்கு வாகனம், கார் மற்றும் லாரி ஆகிய நான்கு வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாகின.

இந்த விபத்தில், டாடா ஏசி வாகனத்தின் பின்புறத்தில் பயணம் செய்த வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் சாலு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களையும் மீட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு வாகனம் உட்பட நான்கு வாகனங்களும் எந்த சூழ்நிலையில் அடுத்தடுத்து மோதின? வாகனங்களின் வேகம் என்ன? இந்த விபத்திற்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்கவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குறிப்பாக சரக்கு வாகனங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN