Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர், 05 நவம்பர் (ஹி.ச.)
பாஜக சார்பில் நடைபெற்ற 'ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம்' என்ற பாதயாத்திரையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்போதும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளன.
ஆனால் காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பைச் சீர்குலைத்து, ஜனநாயகத்தை அழித்து, நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அரசியலமைப்புப் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு பேசுபவர்களுக்கு அதில் இடம்பெற்றுள்ள கொள்கைகள் மீது உண்மையான நம்பிக்கை இல்லை.
அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், ஜனநாயகத்தைக் காப்பதும் நமது கடமை என்பதை மக்களிடம் எடுத்துரைப்பதற்காகவே இன்று இங்கு வந்துள்ளோம்.
ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்களின் செயல்பாடுகளை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என்றார்.
பிரதமர் மோடியுடன் வெளிப்படையான விவாதம் நடத்த வேண்டும் என்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சவால் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த ஆலயம். அங்கு வந்து விவாதிக்கலாம். எந்தவொரு விவகாரம் குறித்தும் விவாதம் நடத்த நாங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை என்று தெரிவித்தார்.
அக்னிவீர் திட்டத்தின் சேவைக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள விவகாரம் குறித்துப் பேசிய அவர், அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே இது ஒரு புதிய முயற்சி என்றும், கிடைக்கும் அனுபவங்களின் அடிப்படையில் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும் என்றும் பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்துள்ளன. இளைஞர்களின் அர்ப்பணிப்பு, உடல் தகுதி மற்றும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளும் திறனை இந்தத் திட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படைகளின் விரிவான ஆய்வுக்குப் பிறகு அரசு நேர்மறையான முடிவை எடுத்துள்ளது என்றார்.
நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுவது குறித்துப் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த 50 ஆண்டுகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பயணிகளின் எண்ணிக்கை, மக்கள் தொகை மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப ரயில் நிலையங்களின் வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
அந்தந்தப் பகுதிகளின் பாரம்பரியக் கட்டிடக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜெய்ப்பூர், ஜோத்பூர், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களின் ரயில் நிலையங்கள் அந்தந்தப் பகுதியின் தனித்துவமான கட்டிடக்கலை அம்சங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 400 நிலையங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மற்ற நாடுகளில் ரயில் நிலையங்களைச் சீரமைக்கும்போது பல ஆண்டுகளுக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால் இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியமானது என்பதால், ரயில் சேவையைப் பாதிக்காமல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து பணிகள் நடைபெறுகின்றன என்றார்.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் ரயில் பாதைக்கு அருகே ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான வெடிப்பு சம்பவம் குறித்துப் பேசிய அவர்,
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மாநில முதலமைச்சர், டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகளும் மாநில நிர்வாகத்தினரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு, தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டுமா என்பதை மாநில காவல்துறை முடிவு செய்யும்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் எந்தச் சதித்திட்டம் இருந்தாலும் அது கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V