டெல்லி காற்று மாசுக்கு பஞ்சாப்தான் காரணமா?- அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா குற்றச்சாட்டு!
புதுடெல்லி, 05 நவம்பர் (ஹி.ச.) டெல்லி சாஸ்திரி பார்க்கில் காற்று மாசுபாட்டைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை (ICCC) அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பே
Manjithar sing


புதுடெல்லி, 05 நவம்பர் (ஹி.ச.)

டெல்லி சாஸ்திரி பார்க்கில் காற்று மாசுபாட்டைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை (ICCC) அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பஞ்சாபில் நெல் அறுவடை இன்னும் தொடங்கவில்லை என்று முதலமைச்சர் பகவந்த் மான் நேற்று கூறியது தவறான தகவல் என அவர் விமர்சித்தார்.

மேலும், பஞ்சாப் அரசின் தரவுகளின்படியே நெல் அறுவடைப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பஞ்சாபில் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகளால் வெளியாகும் புகை டெல்லிக்கு வருகிறதா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால், பஞ்சாபின் தற்போதைய மாசு அளவுகளைப் பாருங்கள். பதிண்டாவில் காற்று மாசு குறியீடு (AQI) 1,100-ஐத் தாண்டியுள்ளது. தல்வாண்டி சாபோ உள்ளிட்ட பகுதிகளிலும் மாசு அளவு 1,000-ஐ கடந்துள்ளது.

இதுபோன்ற நிலை பல இடங்களில் காணப்படுகிறது.பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு, அங்குள்ள மக்களின் உடல்நலத்துடனும் குழந்தைகளின் எதிர்காலத்துடனும் விளையாடி வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

டெல்லியின் காற்று மாசு நிலவரம் குறித்துப் பேசிய அமைச்சர், அக்டோபர் 30-ம் தேதி டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 60 ஆக இருந்ததாகவும், அக்டோபர் 31-ம் தேதி 117 ஆக உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வெறும் சில நாட்களில் காற்று மாசு இவ்வளவு அதிகரித்தது எப்படி? டெல்லியில் புதிதாக கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

புதிய மாசு ஏற்படுத்தும் வாகனங்களோ, தொழிற்சாலைகளோ அறிமுகப்படுத்தப்படவில்லை. அப்படியிருக்கும்போது காற்று மாசு திடீரென அதிகரித்ததற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

கடந்த ஓராண்டாக டெல்லி மக்கள் கடுமையாக முயற்சி செய்து தூய்மைப்படுத்திய காற்று, வெறும் நான்கு நாட்களில் மீண்டும் மாசடைந்துள்ளது. தற்போது காற்றுத் தரக் குறியீடு 350 முதல் 400 வரை செல்லும் நிலையை எட்டியுள்ளது என்றார்.

மேலும், நவம்பர் 3-ம் தேதி ஒரே நாளில் பஞ்சாபில் 584 பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது இதுவரை இல்லாத அளவிலான உயர்வு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தப் புள்ளிவிவரங்கள் பஞ்சாப் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெறப்பட்டவை எனக் குறிப்பிட்ட அவர், அந்த அமைப்பின் நிர்வாக நியமனங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது உறவினரும் டெல்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தவருமான ஒருவரை பஞ்சாப் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நியமித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், பஞ்சாபில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கும் இடையே அரசியல் ரீதியான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V