தாராபுரம் கனிமத் திட்டம் யாருக்காக -த.வா.க வேல்முருகன் கேள்வி
சென்னை, 05 நவம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே அரிய கனிமங்கள் தொடர்பாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட ஆய்வு குறித்து தமிழக அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்
Vel murugan


சென்னை, 05 நவம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே அரிய கனிமங்கள் தொடர்பாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட ஆய்வு குறித்து தமிழக அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

தாராபுரம் வட்டம் கடாபுள்ளபட்டி பகுதியில் பிளாட்டினம் உள்ளிட்ட அரிய கனிமங்கள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது.

கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி ஒன்றிய அரசின் தேசியக் கனிம ஆய்வு அறக்கட்டளை (NMET) சார்பில், 143.37 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அரிய மண் தனிமங்கள், அரிய உலோகங்கள் மற்றும் பிளாட்டினக் குழுத் தனிமங்களைக் கண்டறிவதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வு முன்மொழியப்பட்டது.

இந்தப் பணியை மேற்கொள்ள மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் ஆய்வு முகமையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், முன்மொழியப்பட்ட ஆய்வுப் பகுதி ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வுப் பகுதியுடன் சுமார் 90 சதவீதம் ஒத்துப்போனதால், இந்தத் திட்டம் பின்னர் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் கனிம ஆய்வுகள் தொடர்பாக விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே எழுந்துள்ள அச்சங்களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆரம்பக்கட்ட ஆய்வு, கனிம அகழ்வு, கனிமச் செயலாக்கம் ஆகியவை வெவ்வேறு நிலைகளைக் கொண்டவை என்பதால், ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகளைத் தனித்தனியாக மதிப்பிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் சவாரா, ஆலப்பாடு, கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சி மற்றும் தென்னாப்பிரிக்காவின் ரஸ்டன்பர்க் உள்ளிட்ட பகுதிகளில் கனிமப் பிரித்தெடுப்பு மற்றும் செயலாக்கம் தொடர்பாக மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பகுதிகளில் பதிவான பாதிப்புகள் தாராபுரத்திலும் ஏற்படும் என்பதற்கான நேரடி ஆதாரங்கள் இல்லை என்றாலும், முன்கூட்டியே அறிவியல் அடிப்படையிலான மதிப்பீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடாபுள்ளபட்டி ஆய்வுத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வெளியிட வேண்டும் என்றும், தாராபுரம் பகுதியில் தற்போது வேறு கனிம ஆய்வுகள் நடைபெறுகின்றனவா, எதிர்காலத்தில் சுரங்கம் அமைக்கவோ தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடவோ திட்டம் உள்ளதா என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்துவதுடன், விவசாய நிலங்கள், நிலத்தடி நீர், அமராவதி ஆற்றுப் படுகை ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து சுயாதீன வல்லுநர் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரிய கனிமங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவசியமானவை என்றாலும், அவற்றை எடுக்கும் நடவடிக்கைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் குடிநீர் உரிமையும் பாதிக்கப்படக் கூடாது. எனவே, தாராபுரம் சுற்றுவட்டாரக் கனிம ஆய்வுகள் குறித்த உண்மை நிலவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று வேல்முருகன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V