தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது? -மாணவர்களுக்கு விளக்கிய உத்தரகாண்ட் முதல்வர்!
டேராடூன், 05 நவம்பர் (ஹி.ச.) உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ''தில் கி பாத் தாமி அங்கிள் கே சாத்'' (Dil Ki Baat Dhami Uncle K
Uthrakant


டேராடூன், 05 நவம்பர் (ஹி.ச.)

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

'தில் கி பாத் தாமி அங்கிள் கே சாத்' (Dil Ki Baat Dhami Uncle Ke Saath) என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது:

தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொலைதூர மலைக் கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் முதல் நகர்ப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருடனும் ஒரே நேரத்தில் தொடர்புகொள்ள முடிகிறது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

சமீபத்தில் 'எனது கனவு உத்தரகாண்ட் எப்படி இருக்க வேண்டும்?' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தினோம். இதில் மாநிலம் முழுவதும் இருந்து 2.50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் போட்டியில் கலந்து கொண்டதுடன் மட்டுமல்லாமல், சிறந்த கருத்துகள், ஆழமான சிந்தனைகள் மற்றும் எதிர்கால உத்தரகாண்ட் குறித்த தெளிவான பார்வைகளையும் வெளிப்படுத்தினர்.

இளம் தலைமுறையினரின் சிந்தனைகளும், அவர்களின் திறமைகளும் என்னை மிகவும் கவர்ந்தன. இதன் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தின் எதிர்காலம் பாதுகாப்பான மற்றும் சிறந்த தலைமுறையினரின் கைகளில் இருப்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவர்களிடம் தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தீபாவளி என்பது ஒளியின் திருவிழா என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துவிட்டு ராமர் தனது பிறப்பிடமான அயோத்திக்குத் திரும்பியபோது, ஒட்டுமொத்த நகரமும் தீபங்களால் ஒளிரச் செய்யப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதுவே தீபாவளி கொண்டாட்டத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவதிலும், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதிலும்தான் அதன் உண்மையான சிறப்பு இருக்கிறது.

தீபங்களை ஏற்றி வைப்பதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவும், நமக்கு நெருக்கமானவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், நமது பாரம்பரிய கலாசாரத்துடன் மீண்டும் இணைவதற்குமான வாய்ப்பாக தீபாவளி அமைகிறது என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V