வாழ்ந்து காட்டுவோம் திட்டப் பணியாளர்களுக்கு 3 மாத நிலுவை ஊதியம் வழங்கல் – துரை வைகோ நன்றி
சென்னை, 05 நவம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான நிலுவை ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
Durai vaiko


சென்னை, 05 நவம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான நிலுவை ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டமான வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தன்னை நேரில் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், பணித் தொடர்ச்சி மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்தை நேரில் சந்தித்து, பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாகக் கடிதம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில், நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்குவதுடன், பணியாளர்களின் வேலை தொடர்வதற்கும் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று திட்டப் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான நிலுவை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான ஊதியத்தை வழங்குவதற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இந்த அரசாணை, வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பணியாளர்களின் பணித் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான முக்கியமான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காகப் பணியாளர்கள் தன்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் தனது பதிவில் கூறியுள்ளார்.

மேலும், பணியாளர்களின் பணித் தொடர்ச்சி மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் அடுத்தகட்டப் பணிகளையும் விரைந்து செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், துறை அமைச்சர் என். ஆனந்துக்கும் திட்டப் பணியாளர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக துரை வைகோ தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V