Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 நவம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்புச் சேவை வழங்குவதற்கான உரிமம் கோரி விண்ணப்பித்த மூன்று நிறுவனங்களில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கடைசியாக விண்ணப்பித்ததுடன், பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்ததற்கான ஆவணங்களையும் கடைசியாகச் சமர்ப்பித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவை நுழைவுக்குச் சில குறிப்பிட்ட பெருநிறுவனங்கள் தடையாக இருப்பதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டி ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில்,
செயற்கைக்கோள் தகவல் தொடர்புச் சேவைத் துறையில் அனைத்து நிறுவனங்களையும் இந்தியா வரவேற்பதாகவும், எந்த நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துவது என்பதை இறுதியில் வாடிக்கையாளர்களே தீர்மானிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளன.
வாடிக்கையாளர்கள்தான் முதன்மையானவர்கள் என்றும், சேவையின் விலை, அதற்கான மதிப்பு மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் நுகர்வோர் தங்களுக்கான நிறுவனத்தைத் தேர்வு செய்வார்கள் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜியோ, ஒன்வெப் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களில் ஸ்டார்லிங்க் நிறுவனம் கடைசியாக விண்ணப்பித்ததாகவும், கடைசியாகவே உரிமம் பெற்றதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், மூன்று நிறுவனங்களுக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்ப நடைமுறைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றதாகவும் விளக்கமளித்துள்ளன.
அடுத்தகட்டமாக, உரிமம் பெற்றுள்ள மூன்று நிறுவனங்களும் தங்களது தொழில்நுட்பத் திறன்களை நிரூபிப்பதுடன், பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதில் பார்தி ஏர்டெல் ஆதரவு பெற்ற ஒன்வெப் நிறுவனம் முதலில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்ததற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது.
ரிலையன்ஸ் ஆதரவு பெற்ற ஜியோ நிறுவனம் இரண்டாவதாகவும், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கடைசியாகவும் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P