Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 நவம்பர் (ஹி.ச.)
சம்பா பயிர்க்காப்பீடு செய்வதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதுடன், பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் சம்பா பயிர்க்காப்பீடு செய்வதற்கு காப்பீட்டு நிறுவனங்களும், வேளாண்துறை அதிகாரிகளும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது பயிர்களைக் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குறுவை சாகுபடியில் இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு, சம்பா பயிர்களுக்கும் காப்பீடு கிடைக்காவிட்டால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும்.
பொதுவாக காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா பருவத்தில் 14 லட்சம் ஏக்கரிலும், தாளடி பருவத்தில் 4 லட்சம் ஏக்கரிலும் நெல் சாகுபடி நடைபெறும்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களையும் சேர்த்து ஆண்டுதோறும் 32 முதல் 34 லட்சம் ஏக்கர் வரை சம்பா சாகுபடி செய்யப்படும்.
ஆனால், மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், நடப்பாண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கரில் மட்டுமே சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் மாநிலம் முழுவதும் சம்பா சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட பாதியாகக் குறைந்துள்ளது.
கடந்த அக்டோபர் 9-ம் தேதி சம்பா பயிர்க்காப்பீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்கள், நவம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், காப்பீடு செய்வதில் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக, நிலத்தின் பட்டாதாரர் நேரடியாகச் சாகுபடி செய்திருந்தால் மட்டுமே காப்பீடு வழங்கப்படும் என்றும், அதை உறுதிப்படுத்த பட்டாதாரரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பட்டாதாரர்களில் பலர் உயிரிழந்துள்ளதுடன், சிலர் செல்போன் பயன்படுத்தாதவர்களாகவும் உள்ளனர். இதனால் அவர்களின் வாரிசுகள் அல்லது குத்தகைதாரர்கள் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு காப்பீடு பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கோயில் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களிடம் உழவர் அடையாள அட்டை எண் இல்லாததால் அவர்களாலும் காப்பீடு செய்ய முடியவில்லை.
அதேபோல், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ.75 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதற்கான அரசாணை வெளியிடப்படாததால் அவர்களும் காப்பீடு பெறுவதில் சிக்கலைச் சந்திக்கின்றனர்.
விவசாயிகளில் பெரும்பாலானோர் அதிகம் படிக்காதவர்கள் என்பதால், பயிர்க்காப்பீட்டு நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்களைப் பெற வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நிபந்தனைகள் கடுமையாக்கப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் காப்பீடு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
நடப்பாண்டில் குறுவை சாகுபடி குறைந்துள்ளதால் காவிரி பாசன விவசாயிகள் ஏற்கனவே வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர். சம்பா பயிர்களைக் காப்பாற்ற பிப்ரவரி மாதம் வரை காவிரியில் தண்ணீர் தேவைப்படுகிறது.
மேலும், எல் நினோ தாக்கத்தால் வடகிழக்குப் பருவமழை அதிகமாகப் பெய்தாலும் பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில் பயிர்க்காப்பீடு விவசாயிகளுக்கு மிகவும் அவசியமாகிறது.
எனவே, தமிழக அரசு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிபந்தனைகளை நீக்க வேண்டும்.
மேலும், விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்ய போதிய அவகாசம் வழங்கும் வகையில், சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் 15-ம் தேதியிலிருந்து டிசம்பர் 15-ம் தேதி வரை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V