தீபாவளிக்கு கட்டுப்பாடுகள் மட்டும் தீர்வாகாது – உச்சநீதிமன்றம் கருத்து!
புதுடெல்லி, 06 நவம்பர் (ஹி.ச.) டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) அதிகரித்து வரும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு
Supreme court


புதுடெல்லி, 06 நவம்பர் (ஹி.ச.)

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) அதிகரித்து வரும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்போது காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வும், சுற்றுச்சூழல் மீதான பொறுப்புணர்வும் மக்களிடம் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பதால் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், அதனால் விதிமீறல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

விசாரணையின்போது பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், பண்டிகைக் காலங்களில் நமது பாரம்பரிய பழக்கவழக்கங்களை மீண்டும் பின்பற்றுவது குறித்து ஏன் சிந்திக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.

பண்டிகைகளைக் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி பேசுகையில், பண்டிகைகள் வணிகமயமாக்கப்படுவதும் இந்தப் பிரச்சினையுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார்.

தீபாவளி பண்டிகை மற்றும் சாலைகளில் அதிகரித்த வாகனப் போக்குவரத்து காரணமாக மாசுபாட்டின் அளவு மேலும் உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதிகள், தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதிப்பதும், புதிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதும் மட்டும் பயனளிக்காது என்றனர்.

“எந்தக் கட்டுப்பாடும் மட்டும் பலன் தராது. நாம் பிறப்பிக்கும் உத்தரவுகள் அதிகரிக்க அதிகரிக்க, அவற்றை மீறும் சம்பவங்களும் அதிகரிக்கும்” என்று நீதிமன்றம் தெரிவித்தது.

எனவே, மக்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படுவதுடன், மாசுபாடு குறித்த விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

மேலும், காற்று மாசுபாட்டிற்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களைக் குற்றம்சாட்டக் கூடாது என்றும் தலைமை நீதிபதி எச்சரித்தார். தீபாவளி காலம் என்பது பருவகாலத் தொழில்களை நம்பியிருக்கும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியமான காலகட்டம் என்றும் குறிப்பிட்டார்.

ஏழை மக்கள் மாசுபாட்டை உருவாக்குவதில்லை. அவர்கள்தான் அதன் பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள்.

மாசுபாட்டை ஏற்படுத்துவதற்கான வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் குறித்துத்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V