Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 நவம்பர் (ஹி.ச.)
டெல்லியின் கிருஷ்ணா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்தி மொஹல்லா, கலி எண் 6 மற்றும் கஃபர் மார்க்கெட் பகுதியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலை சுமார் 1.30 மணியளவில் கடைகளில் தீப்பற்றியதாக டெல்லி தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, முதல்கட்டமாக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால், தீயின் வேகம் அதிகரித்ததால் அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ பரவியது. இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தீ விபத்து நடுத்தர வகை பாதிப்பாக வகைப்படுத்தப்பட்டது.
குறிப்பாக, பேட்டரிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் முதலில் தீப்பற்றியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கிருந்து தீ மளமளவெனப் பரவி கட்டடத்தின் மேல்தளங்களையும் சென்றடைந்தது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் மொத்தம் 27 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
சுமார் 125 தீயணைப்புப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். குறுகலான தெருக்களைக் கொண்ட பகுதியாக இருந்ததால், தீயணைப்பு வாகனங்களை உள்ளே கொண்டு சென்று பணிகளை மேற்கொள்வதில் வீரர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது.
மேலும், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடைகளில் அதிக அளவில் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பல எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை கொண்டிருந்ததால் தீ வேகமாகப் பரவியது. இதுவும் தீயணைப்புப் பணியில் கூடுதல் சவாலாக அமைந்தது.
இதுகுறித்து டெல்லி தீயணைப்புத் துறையின் கோட்ட அலுவலர் முகேஷ் வர்மா கூறுகையில், தீ விபத்து தற்போது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், சில கடைகளில் தீயணைப்புக் கருவிகள் இருந்தபோதிலும், அத்தகைய கட்டடத்திற்குத் தேவையான முழுமையான தீ பாதுகாப்பு அமைப்புகள் முறையாக ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V