புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்!
சென்னை, 06 நவம்பர் (ஹி.ச.) முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழக அரசுக்கு கோரிக்க
Sdpi


சென்னை, 06 நவம்பர் (ஹி.ச.)

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள் ஆந்திரக் கடற்பகுதியில் மாயமான நிலையில், தற்போது அவர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 29-ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், ஆந்திரக் கடற்பகுதியில் ஏற்பட்ட திடீர் எஞ்சின் பழுது காரணமாக கடலில் தத்தளித்துள்ளனர்.

அப்போது வீசிய முரசு புயலிலும் சிக்கியதால் அவர்கள் மாயமாகினர்.

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோத்தப்பட்டினம் கடற்கரையில் கவிழ்ந்த நிலையில் அவர்களின் விசைப்படகும், உயிரிழந்த மீனவர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இயற்கையின் சீற்றம் மற்றும் எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உயிரிழந்த மீனவச் சகோதரர்களின் மறைவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்தவர்களை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கும், ஒட்டுமொத்த மீனவச் சமூகத்தினருக்கும் இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வர மனவலிமை கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி துணைநிற்கும்.மேலும், மீனவர்களின் குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது தகுதிக்கேற்ப அரசு வேலைவாய்ப்பும் வழங்கி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோல், ஆந்திர மாநிலத்தில் மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்களை எவ்வித தாமதமுமின்றி அரசின் செலவிலேயே அவர்களது சொந்த ஊருக்குக் கொண்டு வர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உமர் பாரூக் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V