பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் முறைகேடு? – வானதி சீனிவாசன் கண்டனம்
சென்னை, 06 நவம்பர் (ஹி.ச.) கோவை காந்திபுரத்தில் சிறைத்துறைக்குச் சொந்தமான சுமார் 6.98 ஏக்கர் நிலத்தில் பெரியார் அறிவுலகம் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களைக் கொண்ட இந்த வளாகத்தில் தமிழ், ஆங்கில நூல்க
Vanathi srinivasan


சென்னை, 06 நவம்பர் (ஹி.ச.)

கோவை காந்திபுரத்தில் சிறைத்துறைக்குச் சொந்தமான சுமார் 6.98 ஏக்கர் நிலத்தில் பெரியார் அறிவுலகம் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களைக் கொண்ட இந்த வளாகத்தில் தமிழ், ஆங்கில நூல்கள், குழந்தைகளுக்கான நூலகம், போட்டித் தேர்வுகளுக்கான நூலகம், அறிவியல் கண்காட்சி அரங்கம், கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டம், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 16-ம் தேதி தமிழக முதல்வர் விஜய்யால் திறந்து வைக்கப்பட்டது.

அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாகக் கூறப்படும் நூல்களில் ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், சூர்யா பாலு, திரிஷா விஜய், மோனிகா சூர்யா, மனிஷா சரவணன் உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் ஆசிரியர்களாக இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய தமிழக அமைச்சர் ராஜ்மோகன், பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரே பதிப்பகத்தின் பெயரில் 1,500-க்கும் மேற்பட்ட நூல்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பதிப்பகம் மற்றும் நூலாசிரியர்கள் குறித்து சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கீழடி தொடர்பான நூலில் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாரதியார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள நூலின் தரம் குறித்தும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் நூலகத்தில் முறைகேடுகள் நடத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

மேலும், அங்கு இடம்பெற்றுள்ள நூல்களில் தமிழர்களின் வரலாறு, செய்யுள்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழின் தொன்மை, தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் பெருமைகளை பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் எடுத்துரைத்து வரும் நிலையில், இதுபோன்ற தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ள நூல்கள் வாசகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக, இத்தகைய நூல்களைப் படிக்கும் இளைய தலைமுறையினர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள் தமிழர் வரலாறு குறித்த தவறான புரிதலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது என வானதி சீனிவாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V