Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 நவம்பர் (ஹி.ச.)
கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, திமுகவை விமர்சித்து முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், தமிழ் மொழி, இலக்கியம், மண் மற்றும் மானம் ஆகியவற்றைக் காப்பவர்கள் தாங்கள்தான் எனப் பெருமை பேசிக்கொள்ளும் திமுக, ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல்களைப் பரிந்துரைக்கக் குழு அமைக்கப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில் 2025 நவம்பர் 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர் பெருமாள் முருகனே, பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளிப்படுத்தியிருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த அவரைப் பாராட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அரசியலுக்கு வந்த தொடக்கத்திலிருந்தே பெரியார் பெயரைப் பயன்படுத்தி திமுக கொள்ளையடிப்பதாகத் தாங்கள் குற்றம்சாட்டி வருவதாகவும், திமுக மீதான தங்களது விமர்சனங்கள் உண்மை என்பதை அக்கட்சியே தொடர்ந்து நிரூபித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவை பெரியார் அறிவுலகத்திற்காக நூல்கள் தேர்வு செய்யப்பட்ட விதத்தையும் விஜய் விமர்சித்துள்ளார். தரமற்ற நூல்கள் பரிந்துரைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அவர்,
நூலகத்தை உருவாக்கியதாகப் பெருமை பேசிக்கொண்ட திமுக தலைமை, நூல் தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகத் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம், டாஸ்மாக், ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையிலும் முறைகேடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட நூலகத்திலும் ஊழல் புகார் எழுந்திருப்பது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.
இறுதியாக, இவை அனைத்தும் மக்கள் பணம் என்பதால் பொதுமக்கள் கவலை அடைவதாகக் கூறிய விஜய், இத்தகைய செயல்களுக்குத் தமிழ்நாட்டு மக்களும் எதிர்காலத் தலைமுறையினரும் திமுகவை மன்னிக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V