Enter your Email Address to subscribe to our newsletters

உத்திரப்பிரேதேசம் , 07 நவம்பர் (ஹி.ச.)
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் நடைபெற்ற தீபோத்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், ராமர் இந்தியாவின் ஆன்மிகம், கலாசாரம் மற்றும் தேசிய உணர்வின் அடையாளமாகத் திகழ்வதாகத் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் நடைபெற்ற தீபோத்சவ விழாவில் கலந்துகொண்ட அவர், சரயு நதியின் புனிதக் கரையில் இத்தகைய சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், எண்ணற்ற அகல் விளக்குகளின் பொன்னிற ஒளியால் மட்டுமல்லாமல், பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மிக உணர்வுகளின் தெய்வீக ஒளியாலும் இந்தப் புனிதமான மாலைப் பொழுது பிரகாசிக்கிறது.
தீபோத்சவம் என்பது விளக்குகளை ஏற்றி கொண்டாடும் நிகழ்வு மட்டுமல்ல, நமது ஆன்மிக மரபுகளையும் கலாசாரப் பாரம்பரியத்தையும் நினைவுபடுத்தும் விழாவாகும்.
ராமர் என்பது ஒரு பெயர் மட்டுமல்ல. அது ஒரு உயரிய சிந்தனை, நற்பண்புகளின் தொகுப்பு, இந்தியாவின் ஆன்மா மற்றும் தேசிய உணர்வின் அடித்தளமாகும்.
அயோத்தியின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து தொடரும் ஆன்மிகப் பயணத்தை எடுத்துரைக்கிறது.
இந்தியாவின் கலாசாரத் தொடர்ச்சியையும், அடிப்படை வாழ்க்கை நெறிகளையும் அயோத்தி பிரதிபலிக்கிறது என்றார்.
தொடர்ந்து அயோத்தியின் வளர்ச்சி குறித்துப் பேசிய ஆளுநர், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலிலும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையிலும் அயோத்தி நகரின் வளர்ச்சிப் பணிகள் புதிய தொலைநோக்குப் பார்வையுடனும் உறுதியுடனும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அயோத்திக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள், போக்குவரத்து, உணவகங்கள், கைவினைப் பொருட்கள், மலர் விற்பனை, வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் ஆளுநர் ஆனந்திபென் படேல் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V