Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 07 நவம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலம் ஆலப்புழாவில் செய்தியாளர்களிடம் பேசிய கலால் துறை அமைச்சர் எம். லிஜு, கலால் துறையில் சில அதிகாரிகள் மீது எழுந்துள்ள ஊழல் புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
எனது தொகுதி மக்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். மதுபானக் கூடங்களை நடத்துபவர்கள் மட்டுமின்றி, அவற்றை நடத்தாதவர்களையும் எனக்குத் தெரியும். காயம்குளம் தொகுதியில் உள்ள பெரும்பாலான மக்களுடன் எனக்கு நல்ல அறிமுகம் உள்ளது.
துணை ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்களை பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் எனக்கு உள்ளது. அதற்குக் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளின் பணியிட மாற்றங்களை மற்ற அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.
எனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட விவகாரங்களில் நான் தலையிடுவேன்.சில அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. கலால் ஆணையர் இந்த அறிக்கையை முன்கூட்டியே சமர்ப்பித்திருந்தால், விசாரணையை இன்னும் விரைவாகத் தொடங்கியிருக்க முடியும்.
ஏற்கெனவே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அரசுக்குத் தெரியாமல் ஹார்டி-வைன் உரிமம் வழங்கப்பட்டது, பீர் பார்லர்களை மதுபானக் கூடங்களாக மாற்றியது, அரசின் எதிர்ப்பையும் மீறி விமான நிலையங்களில் FL-7 உரிமங்கள் வழங்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கையும் ஆய்வு செய்யப்பட்டு, உரிய விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படும் அதிகாரிகள் ஓய்வுபெற்றிருந்தாலும், அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கருதுகிறேன்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் 488 பீர் மற்றும் ஒயின் பார்லர்கள் மதுபானக் கூடங்களாக மாற்றப்பட்டன. மேலும், 900-க்கும் மேற்பட்ட புதிய மதுபானக் கூட உரிமங்களும் வழங்கப்பட்டன.
அப்போது புளூபெர்ரி டிஸ்டில்லரிக்கும் உரிமம் வழங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களும் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள்” என்று அமைச்சர் எம். லிஜு தெரிவித்துள்ளார்.
கேரள கலால் துறையில் உரிமங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, தற்போதைய மற்றும் முந்தைய ஆட்சிக் காலங்களில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V