Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 07 நவம்பர் (ஹி.ச.)
தீபாவளி என்றாலே புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் பரிமாறி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், பண்டிகை நாளிலும் பொதுமக்களின் மகிழ்ச்சிக்காகவும், நகரின் தூய்மையைப் பாதுகாக்கவும் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்ட பிறகு சாலைகள் மற்றும் தெருக்களில் காகிதக் கழிவுகள், பட்டாசுக் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.
மற்றவர்கள் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்திலும், இந்தக் கழிவுகளை அகற்றி சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
அவர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, நன்னிலம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களின் பாதங்களைத் தண்ணீரால் சுத்தம் செய்து, சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, மலர்களைத் தூவி பாதபூஜை செய்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து, அறக்கட்டளையின் நிறுவனர்களான அப்பு வர்மா மற்றும் காயத்ரி அப்பு வர்மா ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுக்குச் சால்வை அணிவித்து, இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வழங்கினர்.
மேலும், அவர்களை வணங்கி ஆசி பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகையின்போது தூய்மைப் பணியாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாகப் பங்கேற்ற தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்பட்டது.பண்டிகை நாட்களிலும் ஓய்வின்றி உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த முயற்சி, மனிதநேயத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
Hindusthan Samachar / LOGESHWARI V