Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர், 07 நவம்பர் (ஹி.ச.)
சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கோவா மாநிலதிற்கு சுற்றுலா சென்றள்ளார்.
பின்னர் அங்கிருந்து,
மட்காவ் ரயில் நிலையத்திலிருந்து டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி பயணம் மேற்கொள்ளும் வகையில், மூன்று ரயில் டிக்கெட்டுகளை ரூ.10,620 செலுத்தி முன்பதிவு செய்திருந்தார்.
பயண நாளன்று திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே குடும்பத்துடன் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, அவர்கள் செல்ல வேண்டிய ரயில் ஏற்கெனவே புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.
பருவமழைக் கால அட்டவணை மாற்றத்தின் காரணமாக வழக்கமான நேரத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே ரயில் இயக்கப்பட்டிருந்தது.
ஆனால், ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்ட தகவல் தங்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை எனப் பயணி குற்றம்சாட்டினார்.
இதனால் குடும்பத்துடன் மேற்கொள்ளவிருந்த ரயில் பயணம் தடைபட்டது. வேறு வழியின்றி டெல்லி செல்வதற்காக மூவருக்கும் விமான டிக்கெட்டுகளை வாங்கிப் பயணம் செய்தார்.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் கோரி, சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் மற்றும் ஐஆர்சிடிசி மீது பெரோஸ்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு விசாரணையின்போது, பருவமழைக் கால அட்டவணை மாற்றம் குறித்த விவரங்கள் இணையதளம் மற்றும் ரயில் நிலைய அறிவிப்புப் பலகைகளில் வெளியிடப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சேவையை மட்டுமே வழங்குவதாகவும், ரயில் இயக்க நேரத்தை மாற்றுவதில் தங்களுக்கு நேரடிப் பொறுப்பு இல்லை என்றும் ஐஆர்சிடிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் விசாரித்த ஆணையம், பயணிகளுக்கு முறையான மற்றும் காலதாமதமற்ற சேவையை வழங்குவது சம்பந்தப்பட்ட நிர்வாகங்களின் பொறுப்பு எனக் குறிப்பிட்டது.
நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் பயணிகள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தது.
இதையடுத்து, வடக்கு ரயில்வே, கொங்கன் ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவை இணைந்து பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.10,620 டிக்கெட் கட்டணத்தையும், மன உளைச்சல் மற்றும் வழக்குச் செலவுகளுக்காக ரூ.5,000-த்தையும் வழங்க வேண்டும் என ஆணையத் தலைவர் கிரண்ஜித் கவுர் அரோரா கேட்டுக்கொண்டார்.
இதன்படி மொத்தம் ரூ.15,620 இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V