Enter your Email Address to subscribe to our newsletters

பிகானேர், 07 நவம்பர் (ஹி.ச.)
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மத்திய அரசை விமர்சித்து அண்மையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்,
ஜனநாயகம் குறித்துப் பேசும் சோனியா காந்தி, 1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சோனியா காந்தியின் கட்டுரையில் ஜனநாயகம் தொடர்பாக சில கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், 1975-ஆம் ஆண்டு நாட்டில் ஜனநாயகம் முடக்கப்பட்ட காலத்தை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அப்போது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களின் குரல்களும் ஒடுக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தையும் அவர் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகத்தை வளர்த்து, வலுப்படுத்தியுள்ளதாகவும், இந்தியா உலக நாடுகள் மத்தியில் 'ஜனநாயகத்தின் தாய்' எனப் பெருமையுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துகள் குறித்துப் பேசிய அவர், ஹரியானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் இதற்குத் தகுந்த பதிலளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நாடாளுமன்றத்தையே விவாதங்களுக்கான உரிய இடமாகக் குறிப்பிட்டுள்ளனர் என்றார்.
எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த விரும்பினால் அதற்கான தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்றும், தேவைப்பட்டால் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதில் அரசுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், விவாதங்களுக்கு நடுவராக யாராவது செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்துப் பேசிய அவர், ஏற்கெனவே ஜனநாயக அமைப்பில் இதற்கான நடைமுறை இருப்பதாகவும், மக்களவைத் தலைவர் நடுவராகச் செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.
எனவே, புதிய நடைமுறையை முன்வைப்பதை விட நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / LOGESHWARI V