Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம் , 07 நவம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சந்தனமாரி (35). மீன்பிடித் தொழில் செய்து வந்த இவர், கடந்த நவம்பர் 5ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் தனது மகன்களான காளீஸ்வரன் மற்றும் சரத் ஆகியோருடன் சொந்த நாட்டுப் படகில் கடலுக்குச் சென்றுள்ளார்.
அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சந்தனமாரியின் மகன் சரத் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்தனமாரி, ஒரு நொடியும் தாமதிக்காமல் மகனைக் காப்பாற்றும் நோக்கில் கடலில் குதித்துள்ளார்.
ஆனால், அப்பகுதியில் நிலவிய பலத்த நீரோட்டம் காரணமாக சந்தனமாரி நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.
இதற்கிடையே, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சரத்தை உடனடியாகச் சக மீனவர்கள் மீட்டு பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
மகன் உயிர் தப்பிய நிலையில், தந்தை சந்தனமாரி மாயமானது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, தொண்டி மற்றும் நம்புதாளை இடையே கடல் பகுதியில் சந்தனமாரியின் உடல் மீட்கப்பட்டது.
பின்னர் மீட்கப்பட்ட அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த மீனவர் சந்தனமாரியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மருத்துவர் ராஜீவ் திருவாடானை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கு சந்தனமாரியின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அவர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் வழங்கப்பட வேண்டிய நிவாரண உதவிகளை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V