Enter your Email Address to subscribe to our newsletters

உத்திரப்பிரதேசம், 07 நவம்பர் (ஹி.ச.)
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற தீபோத்சவம் 2026 நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வருகை தந்தார்.
அவரை வரவேற்ற உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தமிழகத்தின் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாகப் பாராட்டிப் பேசினார்.
இதுகுறித்து பேசிய யோகி ஆதித்யநாத்,
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த குடியரசுத் துணைத் தலைவர்,
இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த பற்றாலும், நாட்டின் மதிப்புகள் மற்றும் கொள்கைகள் மீதான உறுதியான அர்ப்பணிப்பாலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
மேலும், புனிதமான அயோத்தி மண்ணுக்கு வருகை தந்துள்ள குடியரசுத் துணைத் தலைவரை தீபோத்சவம் 2026 நிகழ்வின் சார்பில் மனமார வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ராமர் கோயில் குடமுழுக்கு விழா குறித்துப் பேசிய யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களால் அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, நகரம் முழுவதும் வானத்திலிருந்து மலர்கள் தூவப்படுவது போன்ற காட்சி காணப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மற்றொரு உரையில் அயோத்தியின் வரலாறு மற்றும் ராமஜென்மபூமி இயக்கம் குறித்துப் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சுமார் 500 ஆண்டுகால அடிமைத்தனமும் வெளிநாட்டு படையெடுப்புகளும் நிறைந்த காலகட்டத்தில், மீண்டும் அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்ததாகக் கூறினார்.
ஆனால், இன்று பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் அயோத்தி தனது பழம்பெருமையை மீட்டெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
ராமஜென்மபூமி இயக்கத்திற்காக கரசேவகர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்ததாகவும், பல்வேறு துறவிகள் நீண்டகாலப் போராட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும், ஸ்ரீராமரின் பெயரை உச்சரித்ததற்காகவே தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படும் காலம் மாறி, தற்போது அயோத்தி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும், திரேதா யுகத்தின் நினைவுகளை ஏற்படுத்தும் வகையில் நகரம் புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V