Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 நவம்பர் (ஹி.ச.)
அதிமுகவைச் சேர்ந்த நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக, வரும் 10, 11 மற்றும் 12-ம் தேதிகளில் விசாரணை நடைபெறும் என்றும், 17-ம் தேதி இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேரும் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதனை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை குறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும், இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து, வரும் 10, 11, 12-ம் தேதிகளில் நடைபெறும் விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வழக்கறிஞர்களும், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராக உள்ளனர்.
தொடர்ந்து, வரும் 17-ம் தேதி இறுதி விசாரணை நடைபெற உள்ளது. இதன் முடிவில் நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P