Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 08 நவம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு மதுபானங்களை கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாக்ரே உத்தரவின் பேரில், மூன்று சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, ஆம்பூர் அடுத்த வெங்கட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்காபுரம் பகுதியில், திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை காவல் ஆய்வாளர், தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த மல்லிகா என்ற பெண்ணை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மல்லிகா விற்பனைக்காக வைத்திருந்த 190 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை உமராபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, உமராபாத் காவல்துறையினர் மல்லிகா மீது வழக்குப்ப திவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சட்டவிரோதமாக மதுபானங்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Hindusthan Samachar / ANANDHAN