வெறிச்சோடிய சென்னை விமான நிலையம்- பயணிகள் வராததால் 2 விமானம் ரத்து!
சென்னை, 08 நவம்பர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையைத் தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் ஏராளமான மக்கள் கடந்த இரண்டு நாட்களாக வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொண்டனர்.
Air india Flight


சென்னை, 08 நவம்பர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையைத் தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் ஏராளமான மக்கள் கடந்த இரண்டு நாட்களாக வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொண்டனர்.

இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 17 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக பண்டிகை காலங்களில் விமான நிலையங்களிலும் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

ஆனால், இந்த ஆண்டு தீபாவளி தினமான இன்று சென்னை விமான நிலையத்தில் நிலைமை முற்றிலும் மாறுபட்டுக் காணப்பட்டது.

பயணிகளின் நடமாட்டம் மிகவும் குறைந்து, விமான நிலையத்தின் பல பகுதிகள் வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதற்கிடையே, சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய இண்டிகோ விமானமும், டெல்லியில் இருந்து சென்னை வர வேண்டிய மற்றொரு இண்டிகோ விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி கொண்டாட்டத்திற்காகப் பெரும்பாலான பயணிகள் ஏற்கனவே தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால், விமானப் பயணத்திற்கான முன்பதிவுகள் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக போதிய பயணிகள் இல்லாத சூழலில், இந்த இரண்டு விமானங்களையும் ரத்து செய்ய இண்டிகோ நிறுவனம் முடிவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண்டிகை நாளில் பயணிகளின் வருகை குறைந்ததால், வழக்கமாக பரபரப்பாக இயங்கும் சென்னை விமான நிலையம் அமைதியான சூழலில் காணப்பட்டது.

Hindusthan Samachar / LOGESHWARI V