Enter your Email Address to subscribe to our newsletters

ஹரித்வார், 08 நவம்பர் (ஹி.ச.)
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் வரை செல்லும் கங்கை கால்வாய், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக 20 நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹரித்வாரில் உள்ள புனித கங்கை நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச நீர்ப்பாசனத் துறை துணைப் பிரிவு அலுவலர் (SDO) பாரத் பூஷண் சர்மா கூறியதாவது:
தசரா பண்டிகைக் காலத்தில் ஹரித்வாரில் உள்ள கால்வாயின் தலைமை நீர்த்தேக்கப் பகுதியில் அதன் நீரோட்டம் நிறுத்தப்பட்டது. இந்தக் கால்வாய் ஆண்டு முழுவதும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், நீர் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் சில முக்கியமான பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது.
எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக கால்வாய் மூடப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் கால்வாயில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு, தேவையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் அடுத்த ஓராண்டுக்கு கால்வாய் தடையின்றி செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மேலும், இந்த ஆண்டு கால்வாய் மூடப்பட்டிருந்த காலத்தில் ஹரித்வார் மாவட்டத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
..குறிப்பாக, புதிய படித்துறைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது கங்கை கால்வாய் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V