Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 08 நவம்பர் (ஹி.ச.)
கர்நாடக மாநில மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், 31.5 சதவீத எத்தனால் கலப்பு விவகாரம் தொடர்பாகவும் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பாதிப்பு ஏற்படுவதாகப் புகார்கள் வந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி வாழ்த்து தெரிவித்துப் பேசிய அவர், ஒளியின் திருநாளான தீபாவளி, மாநில மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்தினார்.
தொடர்ந்து, 31.5 சதவீத எத்தனால் கலப்பு விவகாரம் குறித்துப் பேசிய டி.கே. சிவக்குமார் கூறியதாவது,
இந்த விவகாரம் தொடர்பாக எங்களது அமைச்சருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளோம். 67 இடங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். அந்த இடங்களில் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. வாகனங்களின் இன்ஜின்கள் அடிக்கடி நின்றுவிடுவதாகவும், எரிபொருள் மைலேஜ் குறைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து முதற்கட்டமாக விசாரணை நடத்தியுள்ளோம். தற்போது விசாரணைப் பணிகளில் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
நாளை சம்பந்தப்பட்ட அமைச்சர் அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்த விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுவார்.
இந்தப் பிரச்சினையை அரசு ஒருபோதும் மறைக்காது. எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், பெட்ரோல் விற்பனை நிலையங்களிலேயே எரிபொருள் கலப்பு நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது.
எங்கு விநியோகம் செய்யப்படுகிறதோ அங்கு கலப்படம் நடைபெறுவதாகப் புகார்கள் உள்ளன. இதுதொடர்பான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன.
இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் கவலை அளிக்கக்கூடிய பிரச்சினையாகும். குறைந்த விலையில் கிடைப்பதால், அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கில் கலப்பு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது ஆபத்தானது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
எத்தனால் கலப்பு தொடர்பான புகார்கள் குறித்து கர்நாடக அரசு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர் வெளியிடவுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தை எதிர்பார்த்து வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V