கும்பக்கரை அருவிக்குச் செல்லத் தடை -சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை முக்கிய அறிவிப்பு!
தேனி, 08 நவம்பர் (ஹி.ச.) தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருகில் உள்ள கும்பக்கரை அருவிக்கு வட்டக்கானல், பாம்பாறு உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. கடந்த சில நாட்களாக அருவியில் சீரான நீர்வரத்து காணப்பட்டதால், ஏராளமான சு
Kalvarayan falls


தேனி, 08 நவம்பர் (ஹி.ச.)

தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருகில் உள்ள கும்பக்கரை அருவிக்கு வட்டக்கானல், பாம்பாறு உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

கடந்த சில நாட்களாக அருவியில் சீரான நீர்வரத்து காணப்பட்டதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக, வார இறுதி நாட்களான நேற்று வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அருவிப் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை முதல் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கும்பக்கரை அருவிக்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்து, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தேவதானப்பட்டி வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். அருவிப் பகுதிக்குச் செல்லவும், அங்கு குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என வனத்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி வனச்சரகர் அன்பழகன் கூறுகையில், கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் பாதுகாப்பு எச்சரிக்கையைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் தடையை மதித்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தீபாவளி பண்டிகையன்று அருவிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V